சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம் என கோலிவுட்டின் டாப் ஸ்டார்கள் முதல், வளர்ந்து வரும் ஹீரோக்கள் வரை அனைவருடனும் இணைந்து நடித்துவிட்ட நகைச்சுவை நடிகர் விவேக், முதல் முறையாக உலகநாயகன் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக 'இந்தியன் 2' உருவாகிறது.
விவேக் நெகிழ்ச்சி ட்வீட்
இந்த நிலையில், முதல் முறையாக கமலுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் நடிக்க இருப்பதை நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் நடிகர் விவேக். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
'நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார் க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்கா வுக்கு என் வாழ்த்துக்கள்🙏🏼 miles to go b4 I sleep!' என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையாக இணையும் சிஷ்யர்கள்
உலகநாயகன் கமல்ஹாசன், நகைச்சுவை நடிகர் விவேக் ஆகிய இருவரும் பாலசந்தரின் சிஷ்யர்கள். இருவரும் தங்களது பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளனர். இருந்தபோதிலும் இதுவரை கமல் - விவேக் இணைந்து நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக இணைந்திருப்பதால், 'இந்தியன் 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நட்சத்திர பட்டாளம்
'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் என நான்கு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சித்தார்த், சமுத்திரகனி, ஹிந்தி நடிகர் வித்யுத் ஜாம்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ஆர் ஜே பாலாஜி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
ஷுட்டிங் தொடக்கம்
லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. தற்போது 'பிக் பாஸ்' டிவி தொடரில் பிஸியாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன், விரைவில் படக்குழுவில் இணைவார் எனத் தெரிகிறது.
முன்னதாக 'இந்தியன் 2' படம் குறித்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் தோன்றிய சேனாபதி கதாபாத்திரத்தை மறுஉருவாக்கம் செய்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. பின்னர் சேனாபதி புதிய லுக் புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரத்னவேலு. படத்தை வரும் 2021ஆம் ஆண்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.