சென்னை: 'களவாணி', 'கலகலப்பு' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விமல். இவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "நான் கடந்த 12ஆம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்த திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டதால், என்னுடைய விலை உயர்ந்த செல்போனை அங்கு அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருந்தேன்.
திரும்பி வந்து பார்த்தபோது என்னுடைய செல்போன் காணாமல்போயிருந்தது. கடந்த மூன்று நாள்களாக எனது செல்போனைத் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் காவல் துறையினர் என்னுடைய செல்போனைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கானாத்தூர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இதேபோன்றுதான், மதுரையில் நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் 10 சவரன் நகையை விக்னேஷ் என்பவர் திருடிச் சென்றார்.
இதே விக்னேஷ்தான் மதுரையில் திருடுவதற்கு முன்பு, விமல் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனால் அவர், நடிகர் விமலின் செல்போனைத் திருடியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சீனு ராமசாமியின் இடிமுழக்கம் படப்பிடிப்பு நிறைவு