அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் டாப் பிரபலங்களின் பட்டியல்களைப் பல்வேறு பிரிவுகளில் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இது அவர்களின் வருமானம், ஊடகத்தில் அவர்களுக்கு இருக்கும் புகழ் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்தாண்டுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அக்ஷய் குமார் உள்ளார். மேலும், இப்பட்டியலில் 2016ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக முதலிடம் பிடித்துவந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான் இம்முறை மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் தோனி, ஷாருக் கான், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் முறையே இடம்பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இம்முறை தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகளவில் இடம்பிடித்திருக்கின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் (13), ஏ.ஆர். ரஹ்மான் (16), விஜய் (47), அஜித் (52), இயக்குநர் ஷங்கர் (55), உலகநாயகன் கமல்ஹாசன் (56), நடிகர் தனுஷ் (64), இயக்குநர் சிறுத்தை சிவா (80), இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (84) ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இதில் 47ஆவது இடத்தில் உள்ள நடிகர் விஜயின் வருமானம் ரூ. 30 கோடியாம். இவர், பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு முந்தைய இடத்தில் உள்ளார். நடிகர் விஜய் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும் நபராக உள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் இணையத்தில் அதிகம் தேடப்படும் நபர் என்ற பெருமையை உடைய நடிகை சன்னி லியோன், இப்பட்டியலில் 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவரது வருமானம் ரூ.2.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.