சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது ஒப்பந்தமாகியுள்ள மூன்று படங்களில், தனது சம்பளத்திலிருந்து 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான 'கொலைகாரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. ஃபெப்சி சிவா தயாரிக்கும் 'தமிழரசன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள இவர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிக்கும் 'அக்னி சிறகுகள்', இயக்குநர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் 'காக்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் 2020-இல் வெளியிடும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.
விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளது. இதையடுத்து கரோனா லாக் டவுன் காரணமாக, கடந்த 50 நாள்களுக்கு மேலாக சினிமா தொடர்பாக எந்தப் பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாக மேலும் மூன்று மாதங்கள் ஆகலாம் என்று திரையுலகில் பேசப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக்கூடாது என்ற எண்ணத்துடன், படங்களில் நடிப்பதற்கு தான் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு தாமாகவே முன்வந்து மேற்கூறிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கூறியுள்ளாராம் விஜய் ஆண்டனி.
இந்தச் சம்பள குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அந்தப் படங்களை எந்த பிரச்னைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று அவர் நம்புகிறாராம்.
விஜய் ஆண்டனியின் இந்த முடிவு குறித்து 'அக்னி சிறகுகள்' படத் தயாரிப்பாளர் டி. சிவா கூறியதாவது:
கரோனா லாக் டவுன் காரணமாக 50 நாள்களுக்கு மேலாக தவித்துவரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, முன்னுதாரணமாக இருக்கும் நடவடிக்கை.
அவரைப் போலவே அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து, அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அப்படி செய்தால்தான், தற்போது வெளியாக காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதி சிக்கலும் இல்லாமல் வெளியாகும்.
இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதார பாராட்டுகிறேன். அவர் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'ஒரு வைரஸ் நம்மை வீட்டில் அமர வைக்கும் என்று நினைக்கவில்லை' - விஜய் ஆண்டனி