சென்னை: மோகன்லால், பிரபு, அர்ஜூன், சுனில் ஷெட்டி எனப் பலர் நடித்து உருவாகியிருக்கும் 'மரைக்காயர்' படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
வரலாற்றுப் படமாக உருவாகியிருக்கும் 'மரைக்காயர்' தமிழ்ப் பதிப்பு ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டார். இதையடுத்து 'மரைக்காயர்' படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவிலுள்ள கோழிக்கோட்டில் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக குரல் எழுப்பிய 'குஞ்சாலி மரைக்காயர்' என்ற இஸ்லாமிய மன்னனின் வரலாற்றைக் கூறும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
மலையாளத் திரையுலகின் வெற்றிக்கூட்டணியாக கருதப்படும் இயக்குநர் ப்ரியதர்ஷன் - நடிகர் மோகன்லால் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். படத்தில் மோகன்லாலுடன், நடிகர்கள் பிரபு, அர்ஜூன், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, பிரனவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், மஞ்சு வாரியர், சுஹாசினி, அசோக் செல்வன், இன்னோசன்ட் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
'யார் இந்த குஞ்சாலி' என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 'யுத்தத்தில் நாம் ஜெயிக்கிறோம்' என்று குஞ்சாலியாக தோன்றும் மோகன்லால் கூறும் காட்சி, அனல் பறக்கும் சாகசங்கள் எனப் படத்தின் ட்ரெய்லர் காட்சிகளில் அமைந்துள்ளன.
'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற டேக்லைனுடன் அமைந்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - திரு. கலை இயக்கம் - சாபி சரில். இசை - ரோனி ரபேல். இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் இயக்குநர் ஐ.வி. சசி ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது. படத்தின் கன்னடப் பதிப்பு ட்ரெய்லரை கேஜிஎஃப் படப்புகழ் யாஷ், தெலுங்குப் பதிப்பு ட்ரெய்லரை நடிகர் ராம் சரண், இந்தி ட்ரெய்லரை நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
தமிழில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிடுகிறார். 24 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் - ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டான 'சிறைச்சாலை' படத்தைத் தமிழில் வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு. இதையடுத்து தற்போது அதே கூட்டணியில் வரலாற்றுப் படமாக உருவாகியிருக்கும் 'மரைக்காயர்' படத்தை வெளியிடவுள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் மார்ச் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
பாண்ட் நடிகரின் மனமாற்றம் - மீண்டும் சீக்ரெட் ஏஜெண்டாக அவதாரம்