தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடையே கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, கரோனா நிவாரண நிதிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அரசியல் பிரபலங்கள் முதல் அன்றாடங்காட்சி வரை பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திரையுலகினரும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே, நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சிவகுமார் குடும்பத்தினர், இயக்குநர்கள் வெற்றிமாறன், ஏ.ஆர். முருகதாஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் தனது மகள்- மகன் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகையையும் திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், "நடிகர் அண்ணன் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு என்னிடம் வழங்கினார். சூரி அண்ணனுக்கு என் அன்பும் நன்றியும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: '10 லட்சம் ரூபாய் வழங்கிய அசுரன்; வனமகனும் சளைத்தவர் அல்ல'