நடிகரும், இயக்குனருமான விசு நேற்று காலமானார். இதுதொடர்பாக நடிகர் சிவகுமார் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்," அன்பு விசு, டைரக்டர் கே.பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை உணர்வுப் பூர்வமாக மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால் படம் பிடித்து காட்டியவர் நீங்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘மணல் கயிறு’- இரண்டு படங்கள் போதும். உங்களை உலகம் புரிந்து கொள்ள.
‘அரட்டை அரங்கம்’ உலகப் புகழை உங்களுக்கு சேர்த்தது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு எல்லாம் படையெடுத்து குக்கிராமத்தில் உள்ள ஏழை மாணவ-மாணவிகளின் ஏக்கங்களை, வலிகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளித்து, பல பேருக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்தீர்கள்.
மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை ரத்தமும், சதையுமாக படைப்புகளில் வெளிப்படுத்திய நீங்கள், தனி மனித வாழ்க்கையிலும் ஆரோக்கியத்துக்காக கடைசி நிமிடம் வரை தளராது போராடினீர்கள்.
இறைவன் விதித்த மானுட வாழ்வை கடைசி மணித்துளி வரை வாழ்ந்து விட்டீர்கள். மண்ணில் பிறந்த மனிதன் ஒரு நாள் இந்த மண்ணை விட்டு பிரிந்தே ஆக வேண்டும். உங்களுக்கு கடைசி மரியாதை செய்யக்கூட முடியாதபடி கரோனா வைரஸ் எச்சரிக்கையால் பஸ் பயணம், ரயில் பயணம், விமானப் பயணம் தவிர்க்கும்படி மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
வெளியூர் சென்றவர்கள் வெளியூரிலும், உள்ளூரில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயும் அடைபட்டு கிடக்க 144 தடை உத்தரவு வேறு. என் உயிர் பிரிந்தால் வெளிநாட்டிலிருக்கும் என் குழந்தைகள் இந்தியா திரும்பும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள். அந்தக் குறை இல்லாமல் மக்கள் கடைசி தருணத்தில் உங்களோடு இருந்தார்கள் என்று அறிகிறேன். பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு, மக்களுக்கு பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய். போய் வா நண்பா அடுத்த பிறவியில் சந்திப்போம்...' என்று அந்த இரங்கள் செய்தியில் நடிகர் சிவகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க... நானும் முருக பக்தன்தான் - இந்து அமைப்புகளுக்கு சிவக்குமார் விளக்கம்!