இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்தி வாசுதேவன். 1983ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழில் 'சின்னத்தம்பி' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதில் அவர் இளைய வயது பிரபுவாக நடித்திருப்பார். இதனையடுத்து, 'நடிகன்' திரைப்படத்தில் இளவயது சத்தியராஜாக நடித்துள்ளார்.
பின்னர், தொடர்ந்து 'ரிக்சா மாமா', 'செந்தமிழ் பாட்டு', 'இது நம்ம பூமி' போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 2007இல் 'தொட்டால் பூ மலரும்' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். 2008இல் வெளியான 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' திரைப்படத்தில் நாயகனாக நடித்த இவர் அப்படத்தின் தனது சாதுவான நடிப்பால் பலரையும் கவர்ந்திருப்பார்.
2009இல் வெளியான 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் துணை நடிகராக நடித்திருப்பார். இப்படத்தில், இவரின் கதாபாத்திரம் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது என்றே சொல்லலாம். கல்லூரியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நட்பிற்கு ஒரு எடுத்துகாட்டாய் சக்தி நடித்திருப்பார். பின்னர் இதைத்தொடர்ந்து, 'ஆட்டநாயகன்', 'யுவன் யுவதி', 'ஏதோ என்னை செய்தாய்', 'படம் பேசும்' போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், இவருக்கு எதிர்பார்த்த படங்கள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தனியார் தொலைகாட்சியில் மாறுப்பட்ட நிகழ்ச்சியான 'பிக்பாஸ்'-இல் (முதல் சீசன்) கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், நடிகை ஓவியாவிற்கும் இவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அப்போது அவரை பலரும் 'ட்ரிக்கர்' சக்தி என அழைத்தனர். இந்த நிகழ்ச்சி வாயிலாக பிரபலமானவர்கள் ஏராளம். ஆனால், பிரபலமாக இருந்த சக்திக்கு பிக்பாஸ் எவ்வித உயர்வையும் அளிக்கவில்லை. திரைப்பட வாய்ப்புகளும் தேடி வரவில்லை.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் 'டைகர்' திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக சக்தி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் முத்தையாவின் திரைக்கதை, வசனத்தில் தயாராகும் இந்தப் படத்தை கார்த்தி என்பவர் இயக்குகிறார். சக்தி இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.