தென்னிந்திய சினிமாவில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஷகிலா. 90களில் முன்னணி நடிகர்களுக்கே சிம்மசொப்பனமாக விளங்கியர் ஷகிலா. இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் "ஷகிலா" என்ற பெயரில் தயாராகி உள்ளது. இந்த படத்தை இந்திரஜித் லங்கேஷ் எழுதி இயக்கி உள்ளார்.
ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையையும், வயது வந்தோருக்கான படங்களில் நடித்ததற்காக குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்டது, சினிமா உலகத்தினரே அவரது படங்களை தடை செய்ய வேண்டும் என்று போராடியது போன்ற அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இத்திரைப்படம் கூறவுள்ளது.
இந்தி மொழியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒரே நேரத்தில் வரும் கிறிஸ்துமஸ் அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ராணா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்பட இயக்குநர் பிரவீன் காந்தி, தம்பி ராமையா, செஃப் தாமு, ஷகிலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய ஷகிலா, நான் உயிருடன் இருக்கும்போதே என்னை பற்றிய பயோபிக் படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பற்றி பின்னால் பேசுபவர்கள் குறித்து நான் கவலைப்பட்டது கிடையாது. முன்னாடி பேச எவருக்கும் தைரியம் கிடையாது என்றார்.
மேலும், தனது வாழ்க்கையில் தான் செய்த தவறை இனிவரும் நடிகைகளோ வாழ்வில் முன்னேற துடிக்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், அதற்காக எந்த அரசியல் கட்சி என்னை அணுகினாலும் அவர்கள் கட்சியில் இணைந்து பணியாற்ற தான் தயாராக இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: இசைவாணியை வாழ்த்திய இசைஞானி!