தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். இவரை ஒரு நடிகராக மக்களுக்கு தெரியும், ஆனால் தனியார் நிறுவன செய்தித்தாளை கடைகளுக்கு விநியோகம் செய்து அதே பத்திரிகையில் செய்தியாளராக பணியில் அமர்ந்தது பெரிதாக தெரியாது.
டெல்லியில் உள்ள தமிழ் குடும்பமான ராமநாதன் -புஷ்பலீலா என்ற தம்பதிக்கு கடைசி மகனாக 1954ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி சரத்குமார் பிறந்தார். இவரது தந்தை அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்தவர். பின்னர் இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்த காரணத்தால் தனது பள்ளிப்படிப்பை தமிழ்நாட்டில் தொடங்கினார் சரத். விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவருக்கு ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து என அனைத்தும் அத்துப்படி.
கல்லூரி காலத்தில் என்சிசியில் சேர்ந்த இவர், அதிலும் தனது திறமையால் 1970ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்டார். பின்னர் அவர் உடற்கட்டமைப்பாளராக மாறி 1974 இல் "மிஸ்டர் மெட்ராஸ்" பட்டத்தையும் பெற்றார்.
சினிமா பயணம்
1986ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான சமாஜம்லோ ஸ்த்ரீ என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார் சரத்குமார். கண் சிமிட்டும் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த இவருக்கு அப்போதைய உச்ச நட்சத்திரம் விஜயகாந்தின் திரைப்படமான புலன் விசாரணை படத்தில் வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது. அதில் வெற்றி கண்ட இவருக்கு சிறந்த வில்லனுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதும் கிடைத்தது.
இவ்வாறு எதிர்மறையான கதாபாத்திரத்தில் களமாடிய சரத்குமாருக்கு கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக இடம் கிடைத்தது, அப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் நினைவில் நின்றார். இவர் பயணத்தில் பெரிய திருப்பமாக அமைந்தது பவித்ரன் இயக்கத்தில் வெளியான சூரியன் திரைப்படம். இப்படத்தின் மூலம் கதாநாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
திரைப்பட வெற்றிகள்
அதன் பிறகு உச்ச நட்சத்திரங்களுக்கு ஈடாக சூரிய வம்சம், நாட்டாமை, நட்புக்காக, மூவேந்தர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தார். தற்போது அவர் மேற்கொண்டுள்ள பயணம் அரசியலாக இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் அவர் ஒரு சிறந்த நடிகராகவே இன்றளவும் பார்க்கப்படுகிறார்.
இதையும் படிங்க: பழநிபாரதி - கரும்பாறை மனசில் மயில் தோகை விரிப்பவர்