நடிகர் பிரசன்னா கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுவதாகக் கூறி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது.
இதையடுத்து அவ்விவாகரம் தொடர்பாக மின்சார வாரியம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா செலுத்தவில்லை என்றும், மின் கட்டணம் அதிகமானதுக்கு காரணமும் அதுதான் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உண்மைதான் ரீடிங் எடுப்பதில் இருந்து 10 நாள்களுக்குள் பொதுவாக கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான் மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் கட்டணம் செலுத்தவில்லை.
அதே அளவு இதற்கு முன் காலதாமதமின்றி தவறாமல் கட்டணம் செலுத்தி வருகிறேன் என்பதும் உண்மை. வாரியம் சொல்வது போல் நான்கு மாதம் கணக்கிட்டாலும் மார்ச் மாத கட்டணம் சேர்த்தும் எனக்கு தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம்.
இதை நான் என் தனிப்பட்ட பிரச்னையாக எழுதவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர் நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ட்வீட் செய்தேன்.
மின் வாரியத்தை குறை சொல்வதோ, குற்றம்சாட்டுவது என் நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும் வந்து இருப்பதாக சொல்லப்படும் அதிக கட்டணம் குறித்த கவன ஈர்ப்பு.
ஊரடங்கு காலங்களில் மருத்துவ சுகாதார துறையில் போலவே மின்வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் அயராது பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை நான் நன்றியோடு, பாராட்டவும் மறக்கவில்லை. மற்றபடி வாரியத்தையும், அரசையோ குறை கூறுவது என் உள்நோக்கம் இல்லை.
உள்நோக்கம் இல்லாத போதும் என்னுடைய வார்த்தை மின்வாரிய அலுவலர்களை, மனம் நோக செய்திருப்பின் அதற்காக வருந்துகிறேன். மக்கள் மீது விழுந்திருக்கும் இந்த எதிர்பாராத சுமையை வாரியமும், அரசும் இறக்கி வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
பின்குறிப்பு: என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிலுவையுமின்றி இன்று காலை செலுத்திவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.