தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். அவரது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான கெளரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மோடியையும் அவர் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார்.
இதனால், பாஜகவினரின் கடும் கோபத்திற்கு ஆளானார் பிரகாஷ்ராஜ். மேலும், அவருக்கு சினிமா உலகில் படவாய்ப்புகளும் குறைந்தன.
பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு தனது கருத்தை தெரிவிக்கும் பிரகாஷ் ராஜ், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். பெங்களூர் மத்திய தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது.
மேலும், இந்தத் தொகுதியில்தான் பிரகாஷ்ராஜ் வசித்து வருகிறார். எனவே அவரது சொந்தத் தொகுதியில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் சுயேட்சையாக பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார்.
இதனிடையே, தேர்தல் நடத்தை விதியை மீறியதாக பிரகாஷ்ராஜ் மீது புகார் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.