சென்னை: தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக திகழ்ந்த நடிகர் மோகன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ஹரா" என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார். கோயம்புத்தூர் எஸ்பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில், இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகத்துடன் நடித்தார்.
சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை தொடர படக்குழு திட்டமிட்டுள்ளது. சினிமா ரசிகர்கள் இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து கொண்டாடியது போல, "ஹரா" படத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெரும் என கூறப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கரு என தெரிகிறது.
மோகன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் படம் என்பதாலும், இதில் அவர் புதிய ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளதாலும், "ஹரா" திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரமாண்ட வசூல்.. ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்!