90 கிட்ஸ் மத்தியில் சக்திமான் கேரக்டர் மிகவும் பிரபலம். தூர்தர்ஷன் சேனலில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பான சக்திமான் தொடரை பார்ப்பதற்காக, குழந்தைகள் கூட்டம் காத்து கிடக்கும். எதிரிகளிடம் இருந்து பறந்து பறந்து மக்களை காப்பாற்றும் சக்திமான் கேரக்டர், குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திருந்தது. வீட்டில் ஒரு நபராகவும் மாறியிருந்தார் சக்திமான்.
தொடரை பார்த்து சக்திமான் போன்று கைகளை மேலே தூக்கி, சக்திமான் என கூறியப்படியே மாடியில் இருந்து குதித்த குட்டீஸ்களின் அலப்பறையும் அவ்வப்போது அரங்கேறியது. இதனை கண்டித்து தொடர் ஆரம்பிக்கும் முன்பாக, இதுபோன்று குழந்தைகள் ஈடுபட வேண்டாம் என திரைநட்சத்திரம் போல சக்திமான் அறிவுரை சொல்லிய வரலாறும் உண்டு.
காலத்தால் மறக்க முடியாத சக்திமான் தோற்றத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா, ஒரு படத்துக்காக வேஷம் கட்ட உள்ளார். சக்திமான் போன்று உடையணிந்த மனோபாலாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தோற்றம் எந்த படத்துக்கான கெட்டப் என்று தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.