கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கைதி' திரைப்படம் நாளை வெளியாகிறது. 'மாநகரம்' படத்தை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியான், ரமணா, வாட்சன் சக்ரவர்த்தி, யோகி பாபு, மகாநதி சங்கர், பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாகவும், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் நரேனும் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ஹீரோயின், ரொமான்ஸ், பாடல்கள் இல்லை என்பதால் இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.
இதனிடையே கைதி படத்தின் புரோமோஷனுக்காக நடிகர்கள் கார்த்தி, நரேன் ஆகியோர் கேரள மாநிலம் பாலக்காட்டிற்குச் சென்றனர். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர், அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் கைதி படம் குறித்தும் விளக்கிய அவர் படத்தின் 20ஆவது நிமிடத்தில் இருந்தே க்ளைமாக்ஸ் போன்று விறுவிறுப்பாக இருக்கும் என்றார்.
அப்போது ஒருவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிப்பீர்களா என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி கண்டிப்பாக நடிப்பேன் என்றும், நல்ல கதையுடன் யார் வந்தாலும் நடிக்க தயார் என்றும் தெரிவித்தார். வில்லனாக கூட நடிக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.இறுதியாக அவர் கேரள ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பு விலைமதிப்பற்றது என்று தெரிவித்தார்.