கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லகுண்டாபுரம் என்ற ஊரில் 1939ஆம் ஆண்டு பிறந்தவர் கவுண்டமணி. சிறு வயது முதலே படிப்பின் மீது நாட்டமில்லாமல் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். நடிப்பின் மேல் இருந்த தீராத மோகத்தால் தன்னுடைய 15 வயதில் சென்னையில் உள்ள ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. நாடகங்களில் நடிக்கும்போது அடிக்கடி கவுண்டர் கொடுத்ததால் நாடக உலகில் இவரை கவுண்டர் மணி என்று அழைத்ததாக கூறப்படுகிறது.
நாடகங்களில் நடித்துக்கொண்டே ஒரு சில கருப்பு வெள்ளை படங்களில் நடித்து வந்தாலும் இவரை அடையாளப்படுத்தியது 16 வயதினிலே திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம்தான். இதனைத்தொடர்ந்து தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணியின் வசனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எம். ஆர். ராதாவுக்குப் பின் சினிமாவில் பகுத்தறிவு கருத்துகள் அரசியல் வசனங்கள் நகைச்சுவையில் கலந்து கொடுத்து மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தவர் கவுண்டமணி.
முதலில் தனியாக நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த அவர் பின்னர் நடிகர் செந்திலுடன் இணைந்து மிகவும் பிரபலமானார். நகைச்சுவை நடிகர், வில்லன், குணச்சித்திர நடிகர் என சுமார் 750 படங்களில் நடித்துள்ள கவுண்டமணி 12 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள், வசனங்கள் இன்றளவிலும் பேசப்படுகின்றன. அவர் நடித்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘அமாவாசை’, ‘விஷமுருக்கி வேலுசாமி’, ‘அஞ்சாத சிங்கம் மருதுபாண்டி’, ஆகிய கதாபாத்திரங்களின் உடல்அசைவும், நடனமும், விழிப்புணர்வு கருத்துகளும் மக்கள் மத்தியில் பிரபலமானவை.
இதையும் படிங்க...இவன் காதலின் ரசிகன் - HBD Gautham Vasudev Menon
இணையத்தில் வலம்வரும் இன்றைய தலைமுறை மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆஸ்தான குருவே கவுண்டமணிதான். அவரின் வசனங்கள்தான் இன்றும் இணையத்தளங்களில் உலா வருகின்றன. அவற்றில் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா", "அடங்கொப்பா இது உலக மகா நடிப்புடா சாமி", "பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா", " ரங்கநாதங்கற பேருக்கெல்லாம் சைக்கிள் தர்றதில்லை", "இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது", "நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா", "ஐயோ ராமா, என்ன ஏன் இந்த மாதிரி கழிசட பசங்களோடலாம் கூட்டு சேர வக்கிற", "நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலடா”, ”ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி”, "நான்லாம் அமெரிக்கால பொறக்க வேண்டியது", "நா இங்க ரொம்ப பிசி","மிக்சர் மாமா" போன்ற வசனங்கள் காலத்தை கடந்தும் சாகாவரம் பெற்ற காமெடி வசனங்கள் .
90களில் நகைச்சுவை நடிப்பில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த நடிகர் கவுண்டமணி 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு வாய்ப்புக்கள் குவிந்தும் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த கவுண்டமணி 2013ஆம் ஆண்டு '49ஓ', 'வாய்மை' ஆகிய இரு படங்களில் நாயகனாக நடித்த கடைசி படங்கள். வயது பேதம் இல்லாமல், அனைவராலும் கொண்டாடப்பட்ட வெகு சில கலைஞர்களில் கவுண்டமணியும் ஒருவர். தலைமுறைகளை கடந்து தவிர்க்கமுடியாத காமெடி நடிகராய் வலம்வந்த நடிகர் கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது ஈ டிவி பாரத்.
இதையும் படிங்க... #Hbd_Christoper_Nolan: வில்லாதி வில்லன்களை தந்த திரையுலக மேதை!