சென்னை: இந்து, முஸ்லிம், கிறஸ்தவம் என மூன்று மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலை அமைக்கும் முயற்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளார்.
நடிப்பு, இயக்கம் தவிர மாற்றுத் திறனாளிகளுக்காக அறக்கட்டளை நடத்தி பல்வேறு உதவிகளை செய்துவருகிறார் ராகவா லாரன்ஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்காக கோயில் எழுப்பி பலரால் பாராட்டுகளை பெற்றார்.
இதைத்தொடர்ந்து மத வேறுபாடுகளை கடந்து மனிதம்தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மூன்று மதத்தினரும் வந்து வழிபாடு நடத்தும் வகையில் ஏதுவாக ஆலயம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதங்களாலும், சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். அதனால் தான் இந்த முயற்சி. நெருப்புக்கும், பசிக்கும் சாதி மதம் தெரியாது. அந்த வகையில் அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டு, அன்னதானமும் வழங்க உள்ளோம்.
இந்த அறப்பணி இதுவரை யாருமே சிந்தித்திராத முயற்சி. ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாளான இன்று இதை அறிவிக்கிறோம். இந்த கோயிலுக்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம் என கூறப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் தற்போது தமிழில் சூப்பர் ஹிட்டான 'காஞ்சனா' படத்தின் ரீமேக்காக இந்தியில் உருவாகி வரும் லக்ஷ்மி பாம் படத்தை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் வரும் மே மாதம் திரைக்கு வருகிறது.