சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. காதல் ரசம் சொட்ட சொட்ட நடிக்கும் ஆர்யாவுக்கு, 'நான் கடவுள்' படமும் கை வந்த கலைதான்.
அந்த வரிசையில் முக்கியமான இடத்தை 'சார்பட்டா' திரைப்படம் தக்கவைக்கும் என்பதை அண்மையில் வெளிவந்த அதன் ட்ரெய்லர் காட்டுகிறது.
சார்பட்டா
1970, 80-களில் வடசென்னையில் கொடிக்கட்டி பறந்த எளிய மக்களின் விளையாட்டுதான் குத்துச்சண்டை. இதுதான் சார்பட்டா படத்தின் அதிரடி கதைக்களமாக அமைந்துள்ளது.
கதாநாயகனாக ஆர்யா களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பா. இரஞ்சித் படங்கள் பிற இயக்குநரின் படங்களிலிருந்து வேறுபட, அவருடைய கதைகளும், கதாப்பாத்திர அமைப்பும் மிக முக்கியக் காரணம். அந்த வகையில் சார்பட்டா ட்ரெய்லரில் வரும் கதாபாத்திர அறிமுகமே அதில் நடித்திருக்கும் நாயகர்களின் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகிறது.
இது இரஞ்சித் ஸ்கெட்ச்!
அதில் காதல் படங்களில் ரோமியோவாக வலம் வரும் ஆர்யா, குத்துச்சண்டை வீரராக மிரட்டும் ரகசியம் குறித்து அறிய அவரிடம் பேசினோம்.
சமீபத்தில் வெளிவந்த 'டெடி' திரைப்படத்தின் ஷிவா கதாபாத்திரத்திற்கும், 'சார்பட்டா' கபிலன் கதாப்பாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. எப்படி இந்த மாற்றம்?
'கபிலன் கேரக்டருக்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. இதுக்காகவே ரஞ்சித் சார் 45 நாள் வொர்க்ஷாப் பண்ண வச்சாங்க. வடசென்னையோட மொழியை கத்துக்கிட்டதோட, ஒரு பாக்ஸரா என்னோட உடம்பையும் மெருகேத்தினேன். இந்த ட்ரான்ஸ்பார்மேஷனுக்கு ரஞ்சித் சார் ரொம்ப உதவியா இருந்தார்' என நறுக்கென பதிலளித்தார்.
காமெடி, காதல் போன்ற படங்களில் நடித்த உங்களுக்கு, எளிய மக்களின் அரசியல் பேசும் இயக்குநர் பா. இரஞ்சித்துடன் பணியாற்றும்போது கிடைத்த அனுபவம்...
மிகப்பெரிய படங்களை இயக்கிய இரஞ்சித் சாருடன் எனக்கு இதுதான் முதல் படம். அதுவும் என் கேரியரில் முதல் ஸ்போர்ட்ஸ் மூவி இதுதான். என்னோட பெஸ்ட் பண்ணனும் ஆர்வமாக இருந்தேன். எல்லாமே தானா அமைஞ்சது.
'சார்பட்டா'-வில் 80’ஸ் காலகட்டம் அச்சுஅசலாக படம்பிடிக்கப்பட்டிருப்பது ட்ரெய்லரில் தெரிந்தது. படத்தில் நீங்கள் வியந்து பார்த்தது எது?
உண்மையில் அது அந்தக் காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்குதுனு தான் சொல்லனும். இதெல்லாம் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் உழைப்புதான். இப்போ நாம போய் வடசென்னைல அப்படி ஒரு விஷயத்தைக் கொண்டு வரமுடியாது. அவருதான் 1980-களில் இருந்தமாதிரி அந்த இடத்தை ரீகிரியேட் (recreate) பண்ணினார். இது படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்.
'சார்பட்டா' படம் பிடித்துக்காட்டும் குத்துச்சண்டை இப்போது தடம்தெரியாமல் போய்விட்டது. அது குறித்து...
இது ஒரு கலாசாரம் தான். அந்தக் காலகட்டத்துல அதுக்கு மிகப்பெரிய ரசிகக்கூட்டத்தோட இருந்துச்சு. அதைத்தான் படத்துல காட்டியிருக்கோம். ஆடியன்ஸோட பழைய நினைவுகளை படம் நிச்சயமா (Refreshing memory) நினைவுபடுத்தும்.
இந்தப் படத்திற்கான மெனக்கெடல்கள்...
ரஞ்சித் சார் படத்தோட கதைய சொல்லும்போதே எனக்கு ஷூட்டிங் போக ஆசை வந்துருச்சு. அவர்தான் படத்தோட எல்லா கேரக்டரையும் முடிவு பண்ணுனது. அது எப்படி இருக்கணும்னு வொர்க்ஷாப்ல சொன்னாரு. நான் எதையும் முடிவு பண்ணல. அதுவா அமைஞ்சதுதான். அப்படியே போய்ட்டு இருக்கேன். பார்க்கலாம்' என கேஷூவலாகப் பேசி முடித்தார்.
இதையும் பாருங்க:80’ஸ் கேரக்டர்... ஸ்போர்ட்ஸ் மேன்... சார்பட்டாவுல எல்லாம் தானா அமைஞ்சது- ஆர்யா ஓபன் டாக்