நல்ல திறமையாளராக இருந்தும் அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்காத நபராக இருந்துவருகிறார். 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு அவரது சினிமா வாழ்க்கையில் ஏறுமுகமாக இருந்து வருகிறது.இதனைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த 'தடம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
'செக்கச் சிவந்த வானம்' படத்தில் இவரது நடிப்பை பெரிதும் பாராட்டுக்குள்ளானது. இந்நிலையில், அறிமுக இயக்குநர் விவேக் இயக்கும் 'பாக்ஸர்' படத்தில் அருண் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் கூறிய 'பாக்ஸர்' படத்தின் கதையைக் கேட்டதும் அருண் விஜய்க்கு பிடித்துப் போனதாம்.
அருண் விஜய் 'பாக்ஸர்' படத்திற்காக எடுத்துக்கொண்ட பயிற்சிக் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், பாக்ஸர் படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் பூஜை விழாவில், அருண் விஜயின் தந்தை விஜயகுமார், இயக்குநர் ஹரி, ப்ரீதா ஹரி, இயக்குநர் சாம் ஆண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி. மதியழகன் தயாரிக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.