தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரப்புரையின்போது உடல் நிலை சரியில்லாத விஜயகாந்தை காட்டி வாக்கு கேட்க வேண்டாம் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது இல்லத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது, 'பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, ஏழு பேர் விடுதலை சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது மிகவும் வேதனை அளிக்கிறது. மாநில அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை என்கிறபோது, ராகுல் காந்தி அல்லது பிரதமர் மோடி ஆகியோர் ஏழு பேர் விடுதலை குறித்து வாக்குறுதி அளிக்க வேண்டும். மேலும் கூட்டணியில் உள்ளவர்கள் இந்த உறுதியை பெற்றுத் தர வேண்டும். இது குறித்து வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
அதிமுகவில் தன்னைப் போன்று ஏராளமானோர் இந்த கட்சிக்காக உழைத்துள்ளதாகவும், இந்நிலையில் பாமக கட்சிக்கு மாநிலங்களவை இடம் வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது துரோகம் என குற்றம்சாட்டிய அவர், அதிமுகவில் அதிகளவில் வாரிசுகளுக்கு இடம் வழங்கி இருப்பது தவறு என தெரிவித்தார். கடந்த முறையே ஓபிஎஸ் தனது மகனுக்கு சீட் கேட்டபோது ஜெயலலிதா மறுத்ததாக கூறினார்.
அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, இது அதிமுக கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது என சுட்டிக்காட்டிய அவர், இந்த கூட்டணியை அமைக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.
விஜயகாந்தை வைத்து அவர்களது குடும்பம் அரசியல் செய்ய வேண்டாம் என்றும், அவர் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரை காட்டி வாக்கு கேட்காமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதிமுகவில் தன்னை பரப்புரை செய்ய அழைத்தார்கள். ஆனால் முறையானவர்கள் அழைக்க வேண்டும்; முறையான மரியாதை தர அதிமுக முன் வந்தால் பரப்புரை செய்வேன் என தெரிவித்தார்.
நயன்தாரா குறித்த கேள்விக்கு, ராதாரவி பேசாமல் இருந்திருக்கலாம் - பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என தெரிவித்தார். எனவே அவர்களை இழிவாக பேசியிருப்பது தவறு என்றார்.