விக்ரம்-ஜோதிகா நடிப்பில் வெளியான 'தூள் ' திரைப்படம் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் நாட்டுப்புறப் பாடகியான பரவை முனியம்மா. அந்தப்படத்தில் இடம்பெற்ற 'சிங்கம்போல நடந்து வர்றான் செல்லப் பேராண்டி' என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் இவரது குரல் ஒலித்தது.
மதுரை மாவட்டம் பரவை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் 'பரவை முனியம்மா' என அறியப்படுகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இருதயக் கோளாறு, நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், போதிய பணவசதி இல்லாத காரணத்தால் வீட்டிற்கே கொண்டுவரப்பட்டார். இதனிடையே 'பட்டதாரி', 'டூரிங் டாக்கீஸ்' ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் பரவை முனியம்மாவை நேரில் சந்தித்த நலம் விசாரித்துள்ளார்.
மேலும் அவருக்கு துணிகள், பழங்கள், தேவையான மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்து, பண உதவியையும் செய்துள்ளார்.
தீபாவளிக்கு முன்பே பரவை முனியம்மாவை சந்திப்பதற்காக மதுரைக்கு கிளம்பிய அபி சரவணன், திருச்சி அருகே குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டான் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் திருச்சிக்கு சென்றுவிட்டு பின்னர், மதுரைக்கு வந்து பரவை முனியம்மாவை சந்தித்திருக்கிறார்.
மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பரவை முனியம்மாவுக்கு அரசு உதவிக்கரம் நீட்டி அவரது மருத்துவ செலவை ஏற்க முன்வரவேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.