மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஆதி. இவர், அரவான், கோச்சடையான், யாகவராயினும் நா காக்க உள்ளிட்ட பலங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் நடித்துக்கொண்டே தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மலுப்பு, ரங்கஸ்தலம், நீவெவ்வரு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் கிளாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். கரோனாவால் நிலவி வரும் லாக்டவுனால், இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. லாக்-டவுனால் திரைப்படங்கள் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொற்று காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதனோடு சினிமா கனவோடு காத்திருக்கும் உதவி இயக்குநர்களின் வாழ்க்கையும் கேள்விக் குறியாகியுள்ளது. இதனால், சினிமா வட்டாரத்தில் பல்வேறு தரப்பினரும் பல உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஆதி தனது நண்பர்களுடன் "லெட்ஸ் பிரிட்ஜ்" என்ற தொண்டு நிறுவனத்தை சென்னையில் தொடங்கியுள்ளார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், லெட்ஸ் பிரிட்ஜ் (Lets Bridge) குழுவின் மூலம் லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா உதவி இயக்குநர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
இதுகுறித்து நடிகர் ஆதி கூறியதாவது, "உதவி இயக்குநர்களுக்கு உதவி பொருள்கள் வழங்க முடிவெடுத்து, ஒரு பட்டியலை உருவாக்கினோம். அதன் மூலம், வடபழனி, கோடம்பாக்கம், போரூர், சாலிகிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரைத்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குத் தேவையான நிவாரண பொருள்களை வழங்கியுள்ளோம்.
நாங்கள் செய்வது சிறிய உதவியாக இருந்தாலும், சினிமாத் துறையின் நண்பர்களின் நம்பிக்கையை இழக்காமல் செய்துள்ளோம்" என்றார். நடிகர் ஆதி செய்த உதவிக்கு சினிமாத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!