தமிழ் சினிமாவில் நடிப்பு, எழுத்து, தயாரிப்பு என பன்முகத் தன்மை கொண்ட ஹீரோ கிடைப்பது அபூர்வம். அந்த வரிசையில் விஜய் சேதுபதி ஒருவர். துணை பாத்திரத்திலிருந்து ஹீரோவாக உயர்ந்தாலும் எந்தவித ஈகோவும் பார்க்காமல் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுப்பவர் சேதுபதி.
அப்படி அவர் நடித்தப் படம் ஆரஞ்சு மிட்டாய். கைலாசம் என்ற கதாபாத்திரத்தில் 55 வயதுடைய தந்தையாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
முதலில் அந்தக் கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் பிரச்னை காரணமாக அந்தப் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார்.
ஆம்புலன்ஸ் டிரைவராக ரமேஷ் திலக் நடிக்க பிஜு விஸ்வநாத் படத்தை இயக்கினார். படத்தை தயாரித்தது மட்டுமின்றி படத்தின் வசனங்களையும் விஜய் சேதுபதி எழுதினார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியிருந்த விஜய் சேதுபதி, “இந்தக் கதையை கேட்டபோது எனக்கு என் தந்தை நினைவில் வந்தார்” என்றார்.
கொரியாவில் நடைபெற்ற 20ஆவது பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஆரஞ்சு மிட்டாய் வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.