நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அமேசான் பிரைம் காணொலி மூலம் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டிருக்கும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று பணியாற்றியவர்களுக்குப் பயன்படும் வகையிலும், 'சூரரைப் போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று ஏற்கனவே சூர்யா அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக 1.5 கோடி ரூபாயை திரைப்படத் துறை சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கினார்.
திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான ஃபெப்சிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையில், பெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் 20 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு காசோலையைப் பெற்றுக்கொண்டார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தொகையைப் பெற்றுக்கொண்டார். அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார்.
இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.
சூர்யா, 2D பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர், கற்பரபூர சுந்தரபாண்டியன் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சுரேஷ் காமாட்சி, லலித்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள்.
மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.