திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வானவர்களின் பெயர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை குஜராத்தி மொழித் திரைப்படமான ஹெல்லாரோவுக்கு அறிவிக்கப்பட்டது.
அதே போன்று உரி திரைப்படத்தில் நடித்த விக்கி கவுசல், அந்தாதுன் திரைப்படத்தில் நடித்த ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உரி படத்தின் இயக்குநர் ஆதித்யா தார் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறுகிறார். மேலும் சிறந்த சண்டை, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கேஜிஎஃப் திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது.
இதனிடையே 66ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நாளை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்குகிறார். இந்த விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இந்தியாவில் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகிப் பால்கே விருது அளிக்கப்படவுள்ளது.
பொதுவாக இந்த விருதுகளை குடியரசுத் தலைவரே வழங்குவார். ஆனால் இம்முறை குடியரசுத் துணைத் தலைவர் இதனை வழங்கவுள்ளார். அதைத் தொடர்ந்து விருது பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து அளிக்கிறார். மேலும், இந்த விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் கலந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் சூதாட்ட லஞ்ச புகார்: சம்பத்குமார் ஐபிஎஸ் உள்பட நால்வர் விடுதலை!