காதல் என்னும் கருப்பொருள் தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாள்களிலும் சினிமாவில் 'காதல்' அதிகமாக காணப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எத்தனையோ காதல் திரைபடங்களை நாம் திரையில் பார்த்திருந்தாலும் அவற்றில் சில திரைப்படங்கள்தான் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.
அதற்காக எல்லா படங்களுமே அத்தகைய தாக்கத்தை பார்வையாளர்களின் மனங்களில் விதைக்க வேண்டும் என்றில்லை. எனினும் அப்படியான திரைபடங்கள் காலத்தைக் கடந்து ஒரு பேசு பொருளாக இருக்கும்.
அத்தகைய திரைப்படம்தான் இயற்கை. பொதுவுடமை சிந்தனை கொண்ட மறைந்த இயக்குநர் S. P. ஜனநாதனின் முதல் படம். இயற்கை படம் வெளியாகி இன்றோடு (21.11.2021) 18 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இப்படம் இன்றும் பேசப்பட்டு வரும் காரணம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
பெண் என்பவள் ஆண் சொந்தம் கொண்டாடும் பொருள் இல்லை
காதல் என்றாலே, பார்த்த நொடியில் சட்டென்று பற்றிக்கொள்வது, அந்தப் பெண்ணின் பின்னால் விடாமல் சுற்றுவது, அவளுடைய நண்பர்கள் முதற்கொண்டு தொல்லை படுத்தி இறுதியில் ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து அந்தப் பெண்ணை அணுகி சம்மதிக்க வைப்பது போன்ற விஷயங்களைத்தான் பல ஆண்டுகளாக தமிழ் சினிமா தன் ரசிகர்களுக்கு பழக்கப்படுத்தி வருகிறது.
பல எழுத்தாளர்களின் முயற்சி, சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு, வாசிப்பு போன்ற விஷயங்களால் தற்போதைய காலங்களில் இம்மாதிரியான செயல்கள் தவறு என்று கூறி சில மாற்றங்களுடன் திரைபடங்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் தான் இயக்குனர் S. P. ஜனநாதன். பின்தொடர்ந்து செல்லாமல் (Stalking), அத்துமீறல்கள் இல்லாமல் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து காதல் பேசி அவள் யாருடன் சேர வேண்டும் என்னும் முடிவை அவளே தான் எடுக்க வேண்டும்; அதற்கான முழு உரிமையும் அவளை மட்டுமே சாரும்; மேலும் பெண் என்பவள் ஆண் சொந்தம் கொண்டாடும் பொருள் இல்லை என்பதை அப்போதே திரையில் உரக்கக் கூறியவர் இயக்குனர் S. P. ஜனநாதன்.
முக்கோண காதல்
இந்த விஷயங்கள் அனைத்தும் கதையில் வலிந்து திணிக்கப்படாமல் பிரசார தொனி கொஞ்சமும் இல்லாமல் காட்சி மொழி வாயிலாக கடத்தி திரைக்கதையை நகர்த்தி, தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை தனது முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார்.
ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி-யின் ‘வெண்ணிற இரவுகள்‘ கதையைத் தழுவி எடுக்கப்பட திரைப்படம் இயற்கை. நிறைய முக்கோண காதல் திரைப்படங்களை நாம் பார்த்திருந்தாலும் இயற்கை படத்தில்தான் - காதலிக்கும் பெண்ணின் கோணத்தில் கதை நகரும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.
அப்படி ஒரு திரைப்படம்தான் எடுக்க வேண்டும் என தீர்மானித்து இயக்கியதாக S. P. ஜனநாதன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். இவ்வளவு நேர்த்தியான கலை படைப்பிற்கு பக்க பலமாக படத்தின் நடிகர்கள் தொடங்கி பலரது உழைப்பும் இதில் அடங்கும்.
குறிப்பாக, வித்யாசாகரின் இசையில் படத்தின் இறுதிக் காட்சியில் ஒலிக்கும் இசை பலரது favourite; குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ரிங்டோனாக இன்றுவரை உள்ளது.
18ஆம் ஆண்டில் இயற்கை
சமூக வலைதளம் இந்த அளவிற்கு விரிவடைந்து பெண்ணியம் பேசும் சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்புக்கு பின்பு இப்போதுதான் திரையில் சில மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இவை அனைத்திற்கும் வெகு நாள்கள் முன்னதாகவே வித்தியாசமான அணுகுமுறையில் காதல் திரைப்படமாக வெளியாகி அதில் வெற்றியும் கண்ட திரைப்படம்தான் இயற்கை! 18 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இயற்கை திரைப்படம் பேசுபொருளாக இருந்து வரும் என்பதில் ஐயமில்லை.
எட். விஸ்வநாத் பிரதாப் சிங்