நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து 'மஹா நடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின், அடுத்ததாக பிரபாஸை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வைஜெயந்தி மூவஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வந்தார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் கிரீன் இந்தியா சேலஞ்ச் நிறுவனத்தின் தலைவருமான ஜோகினிபள்ளி சந்தோஷ்குமாருடன் சேர்ந்து அமிதாப் பச்சன் மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பின் அமிதாப் பச்சன் கூறுகையில், ”நாடு முழுவதும் பசுமை விரிவு படுத்தும் நோக்கில் சந்தோஷ்குமார் எடுத்துவரும் முயற்சி பாராட்டுதலுக்குரியது. கே.டி.ராமராவ் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் மூன்று கோடி மரக்கன்றுகள் நட்டது என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்தது. இது நிச்சயமாக ஒரு மகத்தான பணியாகும்.
சுற்றுச்சூழலுக்காக இவர் மேற்கொள்ளும் பணி, அர்ப்பணிப்பு குறித்து நான் வியக்கிறேன். இப்போது கின்னஸ் சாதனைக்காக ஒரு மணி நேரத்திற்குள் 2 கோடி விதை பந்துகளை நடும் முயற்சியில் நானும் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கிரீன் இந்தியா சேலஞ்ச் பற்றி நான் அறிந்திருக்கிறேன். இதில் நானும் பங்கேற்றது பெரிய அதிர்ஷ்டம். இதனை முன்னோக்கி எடுத்துச் செல்லும் சந்தோஷ்குமாருக்கு வாழ்த்துகள்” என்றார்.
அப்துல் கலாம் நினைவு தினமான இன்று (ஜூலை 27) அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நடிகர் நாகார்ஜுனா, தயாரிப்பாளர் அஸ்வினி தத், ராமோஜி ஃபிலிம் சிட்டி எம்.டி விஜயேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.