ஜெர்மானிய இயக்குநர் டாம் டைக்வேர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ரன் லோலா ரன்'. பிராங்கா பொடன்டி, மொரிட்ஸ் ப்ளெயிப்ட்ரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தை தழுவி 'லூப் லபீடா'(Looop Lapeta) எனும் பாலிவுட் திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ஆகாஷ் பாட்டியா இயக்குகிறார். இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டாப்சி, தாஹிர் ராஜ் பாசின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனையடுத்து இப்படத்திற்கு கோவிட்-19 நோய்க்கான காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கோவிட்-19 நோய்க்கான காப்பீடு செய்யப்பட்ட முதல் படம் இதுவாகும்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களான அதுல் காஸ்பேகர் - தனுஜ் கார்க் ஆகியோர் கூறியதாவது, 'எங்கள் படத்திற்கு கோவிட்-19 காப்பீட்டைப் பெறுவதற்கு சட்ட வல்லுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
இதன்மூலம் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வரும் முதல் திரைப்படமாக லூப் லபீடா இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கோவிட்-19 காப்பீடு என்பது ஒரு விபத்து காப்பீடு போன்றது. பொதுவாக, ஒரு படத்திற்கு காப்பீடு மிகவும் அவசியம். ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பிரபலங்களில் யாரேனும் நோய் வாய்ப்பட்டாலோ அல்லது இறந்தாலோ அல்லது இயற்கை பேரழிவுகள் ஏதேனும் நிகழ்ந்தாலோ, அதிலிருந்து திரைப்படத்தை காப்பதற்கு காப்பீடு அவசியம்.
கோவிட்-19 காப்பீடு புதியது என்பதால், இதுகுறித்து நாங்கள் இன்னும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வருகிறோம்.
உதாரணமாக, எங்கள் படப்பிடிப்புக் குழுவில் யாரேனும் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால், முழு படக்குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டி வரும். அவ்வாறு இருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் இந்த நாட்களில் செலவழிக்கும் பணத்தை, இந்தக் காப்பீடு மூலம் அவர்கள் திரும்பப் பெறலாம்.
இந்தக் காப்பீடு இருப்பதால், எங்கள் குழுவில் யாரேனும் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால் யாரும் அச்சப்பட வேண்டாம். அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிப்போம்' என்று கூறினர்.
மேலும் அவர்கள் தொடர்ந்து கூறுகையில், 'லூப் லபீடா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல், மே மாதங்களில் மும்பை, கோவாவில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இந்தப்படத்தில் 70 விழுக்காடு வெட்டவெளியில் படமாக்கப்பட வேண்டியவை. ஆனால், தற்போது கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புப் பணிகள் எங்களுக்கு மிகவும் சவாலாக அமைந்துள்ளது.
கோவாவில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் பெரிய படக்குழுவினருடன் அங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பது ஆபத்தானது. அதுமட்டுமல்லாது, தற்போது மழைக்காலம் என்பதால், எங்களால் அங்கு முழுமையாக படப்பிடிப்பை நடத்த முடியாது.
எனவே, இந்த மழைக் காலங்களும் ஊரடங்கு உத்தரவும் முடிந்த பிறகு, ஒரு நல்ல கால சூழ்நிலை ஏற்படும்வரை நாங்கள் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளோம்' எனக் கூறினர்.