இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவர் ஜூன் 14ஆம் தேதி மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை பேசும்பொருளானது. நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பிரபலங்கள் சுஷாந்தின் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய்லீலா பன்சாலி மற்றும் கரண் ஜோகர் உள்ளிட்டோர்தான் காரணம் எனக் கூறி பிகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர், வழக்கை நேற்று (ஜூலை8) தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து வழக்குரைஞர் சுதீர் குமார் ஓஜா கூறுகையில், “சுஷாந்த் மிகவும் கலகலப்பானவர். அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவர். அவரின் மரணம் ஒட்டுமொத்த பிகார் மக்களுக்கும் துன்பத்தை கொடுத்தது. அவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆகவே, தலைமை நீதித்துரை நடுவரின் தீர்ப்புக்கு எதிராக நான் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்” என்றார்.
இதையும் படிங்க: சுஷாந்த் சிங்கின் 'தில் பேச்சரா' டிரெய்லர் வெளியீடு!