மும்பை: சுஷாந்த் சிங் வழக்கு விசாரணையை சிபிஐ 2 மாதங்களுக்குள் முடிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை சேர்ந்த தம்பதி இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், சுஷாந்த் சிங் வழக்கில் சிபிஐ பொறுப்புடன் செயல்படவில்லை. விசாரணையில் எதுவும் முன்னேற்றம் இல்லை. இது நீதியை இருட்டில் தள்ளுவதற்கு சமம்.
மோசமான கொலை வழக்குகளில் கூட 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், சுஷாந்த் வழக்கில் ஏன் கால தாமதம். இதனால் சமூக வலைதளங்களில் சுஷாந்த் மரணம் குறித்த செய்திகள் வலம்வருவது குறைந்தபாடில்லை. இது சுஷாந்தை நேசிப்பவர்கள் மனதை காயப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதமே இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.