டெல்லியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொதுமுடக்கம் அச்சத்தால் அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்தக் காலகட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலையின்றி இருப்பதால், அவர்களுக்கு தினசரி உணவு கிடைப்பது பெரும்பாடாகவுள்ளது. இதனை போக்க அவர்களுக்குப் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பிரபலங்களும் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் விலங்குகள் நலஅமைப்பான பீட்டாவுடன் இணைந்து, 10 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிவருகிறார். இதுகுறித்து சன்னிலியோன் கூறியதாவது, "நாம் ஒரு நெருக்கடியான காலத்தை எதிர்கொள்கிறோம்.
இந்த காலகட்டத்தை இரக்கத்துடனும் ஒற்றுமையுடன் இணைந்து கடப்போம். இந்த நேரத்தில் பீட்டா அமைப்புடன் கைகோர்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயிரக்காணக்கானவர்களுக்கு புரோட்டீன் நிறைந்த சைவ உணவு கிடைக்கும். சாப்பாட்டில் பருப்பு, சாதம் அல்லது கிச்சடியுடன் பழங்கள் இருக்கும்" என்றார். இதே போல் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.