கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடிகர் சோனு சூட் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இதுதவிர பலருக்கு மருத்துவ உதவி, ஏழை குடும்பத்துக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது என்று பல சேவைகளை செய்தார்.
அதுமட்டுமில்லாது மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், காவலர்களுக்கு முகக்கவசங்கள், வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்தது என தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்துள்ளார்.
இந்நிலையில் சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா.மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய அனுபவங்கள் குறித்து 'I Am No Messiah' என்ற புத்தகத்தையும் சோனு சூட் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில தேர்தல் அலுவலர் கருணா ராஜு பஞ்சாப்பில் உள்ள மோகா (Moga) மாவட்டத்தில் பிறந்த சோனு சூட்டை மக்களிடையை குறிப்பாக இளம் வாக்களர்களிடையே தேர்தல், வாக்குகளின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பஞ்சாப் அடையாளமாக மற்றவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவரின் இந்த கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம் சோனு சூட்டை பஞ்சாப் அடையாளம் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு சோனு சூட் தனது சமூகவலைதளப்பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.