டெல்லி: ஐயோடின் சேர்க்கப்பட்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளமாறு அறிவுரை கூறியுள்ளார் பாலிவுட் நடிகை சோனம் கபூர்.
பேஷன் ஆடைகள், ஆபரணங்கள், மேக்கப் பொருட்கள் என லேட்டஸ்ட் விஷயங்களை பாலிவுட்டினருக்கு அறிமுகப்படுத்தி ட்ரெண்ட் செட்டராக இருந்துவரும் நடிகை சோனம் கபூர். அவ்வப்போது சமூக கருத்துகளையும், விழப்புணர்வுகளையும் அவர் தெரிவித்துவருகிறார்.
அந்த வகையில், அவர் தனது சமீப இன்ஸ்டாகிராம் பதிவாக, சைவ உணவு உண்பவர்களுக்கும், சைவப் பிரியர்களுக்கும் ஒரு குறுந்தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், ”நீங்கள் உண்ணும் உணவில் எடுத்துக்கொள்ளும் உப்பில் ஐயோடின் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
எனக்கு ஐயோடின் குறைபாடு இருப்பதை தற்போதுதான் அறிந்தேன். எனவே சோடியம் கிளோரைடு அதிகளவில் இருக்கும் டேபிள் சால்ட்டை பயன்படுத்துங்கள். அவை ஐயோடின் பெறுவதற்கான எளிமையான வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் சைவத்துக்கு மாறிவிட்டேன் என்று பிரபலங்கள் பலர் கூறிக்கொள்வது ட்ரெண்டாகி வரும் வேளையில், சைவ உணவை வைத்து பகிரப்படும் தகவல்கள் ரசிகர்களிடம் விவாதப் பொருளாக மாறிவருகிறது.