மும்பை: தூம் 2 வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரோஷன் - ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கு நடன அமைப்பு செய்ததைப் பற்றி அப்படத்தின் நடன அமைப்பாளர் சியாமக் தவார் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், தூம் 2 படத்தில் ரித்திக் - ஐஸ்வர்யா ஜோடிக்கு நடன அமைப்பு செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இருவருமே இந்தியாவின் தலைசிறந்த நடன கலைஞர்கள். அவர்களுக்கு நான் நடனம் அமைத்தது இன்றளவும் பாலிவுட்டில் முத்திரை பதித்துள்ளது. என்னுடைய நடன கலைஞர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
ஐஸ்வர்யா ராயோடு ‘தால்’ படத்தில் முன்பே பணியாற்றியிருக்கிறேன். அதனால் அவருக்கு என்னுடைய ஸ்டைல் நன்றாக தெரியும். ஆனால், ரித்திக் எனக்கு புதியவர். அவர் இயல்பாகவே நல்ல நடனக் கலைஞர் என்பதால், எனக்கு அவரை கோரியோகிராப் செய்வது எளிதாக தெரிந்தது. ரித்திக் மற்ற படங்களில் வழக்கமாக ஆடிய நடனத்தில் இருந்து இந்தப் படத்துக்கான நடனம் வேறுப்பட்டிருந்தது. அதை எளிதாக புரிந்துகொண்டு ஆடினார். ரித்திக் - ஐஸ்வர்யா ஜோடியை திரையில் பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. இருவரும் மிக அருமையாக நடனமாடியிருந்தனர் என்றார்.