'தபாங் 3' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மான் கான்-பிரபு தேவா இணைந்துள்ள படம் 'ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்'. திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா, சோஹேல் கபூர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சல்மான் கான் படத்தைத் தயாரிக்கிறார்.
2009ஆம் ஆண்டு வெளியான 'வாண்டட்' திரைப்படத்தின் அடுத்த பாகமாக எடுக்கப்பட்டுவரும் இந்தப் படம் 'வெடரன்' என்கிற தென் கொரிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மே 22ஆம் தேதி ரம்ஜான் வெளியீடாக வர இருந்தது. அப்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இதன் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் 'ராதே' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
ராதே திரைப்படத்தை படக்குழுவினர் திரையரங்கில் வெளியிட திட்டவட்டமாக முடிவெடுத்திருப்பதாகவும் அதனால் ஓடிடியில் வெளியாகாது எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படம் அடுத்தாண்டு ரம்ஜான் வெளியீடாக வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.