உலக முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஹாலிவுட்டில் உள்ள பல படங்களின் படப்பிடிப்பும், தயாரான படங்களின் வெளியீட்டுத் தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சல்மான்கான் திஷா பதானி நடிப்பில் உருவாகிவரும் 'ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்' படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இப்படத்தின் படப்பிடிப்புப் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதன் படப்பிடிப்பை இம்மாத இறுதிக்குள் முடிக்க படக்குழு முடிவுசெய்துள்ளது.
'ராதே' படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு மும்பை, கோவா ஆகிய நகரங்களில் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. தற்போது சல்மான்கான் - திஷா பதானி பாடல் காட்சி ஒன்று மீதமுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்' படத்தினை பிரபுதேவா இயக்குகிறார். ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சல்மான் கான் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடித்துவருகிறார். இப்படம் பிரபுதேவா இயக்கிய ‘Wanted' படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது.
இப்படம் இந்தாண்டு ஈத் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.