பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். 54 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் 'தி மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர்' என்ற அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார். 'பாலிவுட்டின் டைகர்' என அழைக்கப்படும் இவர், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூகசேவைகளையும் செய்து வருகிறார்.
இதனையடுத்து சல்மான் கான் ஏலன் அறக்கட்டளையுடன் இணைந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டம், 'கிட்ராபூர்' கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார். சாங்கிலி, சதாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல கிராமங்கள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தனர். வீடுகளை இழந்த மக்களுக்கு அம்மாநில அரசும் அறக்கட்டளைகளும் வீடு கட்டிக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், சல்மான்கான் தற்போது ’கிட்ராபூர்' கிராமத்தில் வசிக்கும் மக்களின் நலன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க உள்ளார்.
சல்மான்கானைத் தவிர, தீபிகா படுகோனே 2010ஆம் ஆண்டு மின்சார வசதி இல்லாத மகாராஷ்டிராவில் இருக்கும் 'அம்பேகான்' என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.
அதுமட்டுமல்லாது பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஆமீர் கான் உள்ளிட்டோர்களும் கிராமங்களைத் தத்தெடுத்துள்ளனர்.
சல்மான்கான் நடிப்பில் 'ராதே', 'கபி ஈத் கபி தீபாவளி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.