கரோனா தொற்று காரணமாக, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக ஏழை எளிய மக்கள் தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக அனைத்து வித படப்பிடிப்புகளும் ரத்து ஏற்பட்டுள்ளதால், அதனை நம்பியிருந்த சினிமா தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது இவர்களுக்கு உதவுவதற்காகப் பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான ரோஹித் ஷெட்டி முன்வந்துள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கத்ரான் கே கிலாடி: மேட் இன் இந்தியா (Khatron Ke Khiladi: Made In India) என்னும் சாகச ரியாலிட்டி ஷோவை ரோஹித் ஷெட்டி தொகுத்து வழங்குகிறார்.
இதில் கிடைக்கும் தனது வருமானத்தை, பாலிவுட்டில் இருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட், லைட்மேன்கள், ஸ்டண்ட் மேன்கள் உள்ளிட்டவர்களுக்கு கொடுக்க தீர்மானம் எடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியானது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க மும்பையில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக, இந்த நிகழ்ச்சி பல வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. இந்த சீசனில் கரண் வாஹி, ரித்விக் தஞ்சனி, ஹர்ஷ் லிம்பாச்சியா, ரஷாமி தேசாய், நியா சர்மா, ஜாஸ்மின் பாசின், அலி கோனி மற்றும் ஜே பானுஷாலி ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். முன்னதாக, ரோஹித் மும்பை காவல் துறையினர் பயன்படுத்திக் கொள்ள நகரில் இருக்கும் தனது 11 ஹோட்டல்களை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.