மும்பை: பிரபல இயக்குனர் ஓம் ராவத் டைரக்ஷனில் ஆதிபுருஷ் படம் உருவாகிவருகிறது. இந்தப் படம் மிகப்பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிவருகிறது.
படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சைஃப் அலி கான் மிரட்டும் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார். இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை ஓம் ராவத் செப்டம்பர் 3ஆம் தேதி ட்விட்டரில் வெளியிட்டார்.
அதில், “7 ஆயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த உலகின் அறிவார்ந்த அசுரன்” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இந்தப் படம் மற்றும் இயக்குனரின் வரிகளை பார்க்கும்போது, படம் இராமாயணம் குறித்த கதை என்பது தெளிவானது.
மேலும் ஆதிபுருஷ் படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் இராமனாவும், சைஃப் அலி கான் இலங்கேஸ்வரன் வேடம் பூண்டிருப்பது உறுதியானது. இதற்கிடையில் படத்தின் அதிகாரப்பூர்வ இலட்சினையை நடிகர் பிரபாஸூம், இயக்குனர் ஓம் ராவத்தும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் இப்படம், தெலங்கு, இந்தி மொழிகளில் நேரடியாகவும், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இதர மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகிறது.
முன்னதாக ஆதிபுருஷ் படத்தில், “பிரபாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று இயக்குனர் ஓம் ராவத் கூறியிருந்தார். மேலும் அவர், “பிரபாஸ் ஒரு ஆளுமை. அவர் அமைதியானவர், அவரின் கண்கள் மிகவும் அழகானவை. கதையோடு ஒன்றி அவர் நடிப்பதை பார்க்கையில் அவரிடம் ஆதிபுருஷ் -ஐ பார்க்கிறேன். அவர் இல்லையென்றால் நான் இந்தப் படத்தை எடுத்திருக்க மாட்டேன்” என்றார்.
ஓம் ராவத் இயக்கத்தில் தன்ஹாஜி திரைப்படம் ஜனவரியில் வெளியானது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'ஆதிபுருஷ்' படத்தில் இணைந்த அனுஷ்கா ஷர்மா?