மும்பை: எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய 'நாகினி' புகழ் நடிகை மெளனி ராய், நடனம் ஆடி குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வித்துள்ளார்.
இதுகுறித்து மெளனி ராய் கூறியதாவது:
எச்ஐவி குறித்தும், அதனால் ஏற்படும் அச்சங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். எச்ஐவி பாதிக்கப்பட்டவரை தொட்டாலே தொட்ட நபரும் பாதிக்கப்படுவார் என்ற தவறான கருத்து மாற வேண்டும்.
பிறப்பிலிருந்தே எச்ஐவி பாதிப்பை கொண்ட இந்தக் குழந்தைகள், தனி கவனத்தை செலுத்துவதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தரும் மரியாதையை இவர்களுக்கும் தர வேண்டும்.
இவர்கள் நம்மைபோல் சாதாரணமானவர்கள். இன்றைய பொழுதை மிகவும் நல்ல நேரமாக உணர்கிறேன். இந்தக் குழந்தைகளுடன் மாலைப் பொழுதை கழித்தது எனது சிறுவயது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாள்களை நினைவுபடுத்தியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிரபல தன்னார்வ நிறுவனத்தில் வைத்து கொண்டாடியுள்ளார் நடிகை மெளனி ராய். கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய அவர் குழந்தைகளுடன் நடனம் ஆடி, விளையாடி மகிழ்வித்தார்.
'நாகினி' தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் மெளனி ராய். சினிமாக்களிலும் ஹீரோயினாக நடித்துவருகிறார். இந்த ஆண்டில் இவரது நடிப்பில் இரு படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது அமிதாப் பச்சன், ஆலியா பட், ரன்பீர் கபூர் ஆகியோருடன் இணைந்து பிரமாஸ்த்ரா என்ற படத்தில் நடித்துவருகிறார்.