நரேந்திர மோடியின் இளமைக் காலத்தில் ஆரம்பித்து அவர் குஜராத் மாநிலத்துக்கு மூன்று முறை முதலமைச்சர், அதன்பின் பிரதமர் ஆனது வரை அவரது வாழ்க்கை கதையை சொல்லும் விதமாக 'மோடி: சிஎம் டு பிஎம்' என்கிற வெப்சீரிஸ் எடுக்கப்பட்டு வருகிறது. இதை உமேஷ் சுக்லா என்பவர் இயக்குகிறார். இந்த வெப் சீரிஸின் முதல் சீசனில் இளம் நரேந்திர மோடியாக ஆசிஷ் சர்மா நடித்திருந்தார்.
தற்போது இதன் இரண்டாவது சீசன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடுத்தர வயது தோற்றத்தில் மோடியாக மகேஷ் தாகூர் நடிக்கிறார். இது குறித்து மகேஷ் தாகூர் கூறியதாவது, நரேந்திர மோடியின் வாழ்க்கை பயணத்தைப் பற்றி நாம் அனைவருக்கும் பொதுவாக தெரியும். நமது தேசத்தில் பெருமைக்கு உரிய இடத்தில் இடம்பெறும் கதை இது. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு உண்மையில் ஒரு கௌரவம்.
ஆனால், அதே நேரத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பெரிய பொறுப்புகளும் உள்ளன. பார்வையாளர்கள் இதை எப்படி ரசிப்பார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். ஒட்டுமொத்த தொடரும் அவர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று கூறினார். 'மோடி: சிஎம் டு பிஎம்' இரண்டாவது சீசன் ஈராஸ் நவ் தளத்தில் நவம்பர் 12 முதல் ஒளிபரப்பாக உள்ளது.