தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மகேஷ் பாபு. இவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். மே 9ஆம் தேதி இவரது நடிப்பில் வெளிவந்த 'மகரிஷி' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மகரிஷி வெளியான நான்காவது நாளே 100 கோடியை தொட்டு தெலுங்கு சினிமாவில் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
![மகரிஷி பட போஸ்டர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3387613_mahesh.jpg)
இயக்குநர் வம்சி பாடிபல்லி இயக்கிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, அல்லாரி நரேஷ், ஜெகபதி பாபு, சாய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழில் கால் பதிக்க நினைத்து ஸ்பைடர் படத்தில் நடித்த மகேஷ் பாபுவிற்கு அவரது சினிமா கேரியரில் மிகப்பெரிய சறுக்கலை தந்தது. இதையடுத்து வெளிவந்த பாரத் அநே நேனு திரைப்படம் பிரமாண்ட வெற்றியை தந்து மகேஷ் பாபுவின் சினிமா வாழ்வில் புதிய அத்தியாயமாக இருந்தது. அப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.
தற்போது, 'மகரிஷி' கொடுத்துள்ள வெற்றி மகேஷ் பாபுவிற்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. மகரிஷி விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வரும் இளம் தலைமுறையினரும் விவசாயிகளாக ஆக வேண்டும் என்பதை ஆழமான கருத்துடன் சொல்லியுள்ளது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
![மகேஷ் பாபு, நம்ருதா ஷிரோத்கர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3387613_mahi.jpg)
இந்நிலையில், மகேஷ் பாபுவின் மனைவி நம்ருதா ஷிரோத்கரும், நம்ருதாவின் தங்கை ஷில்பாவும் மகேஷ் பாபுவை அன்புடன் அரவணைத்து மகரிஷி படத்தின் வெற்றியை கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நம்ருதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில், '43 வயது இளைஞர் சிரிப்பதை பாருங்கள். இந்த புன்னகைக்கும், மகிழ்ச்சிக்கும் ரசிகர்கள்தான் காரணம். வெற்றிகரமான பயணம் ஒரு இலக்கு அல்ல. இவை அனைத்தும் நீங்கள் தந்தது. எங்களது மனம் நிறைந்த நன்றிகள்' என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.