லண்டனில் இருந்து மார்ச் மாதம் 9ஆம் தேதி, மும்பை வந்த கனிகா கபூர் பின் லக்னோவில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அதில் அரசியல் பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றை மறைத்து, இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அவரை சமூக வலைதளத்தில் பலரும் திட்டித் தீர்த்தனர். மேலும் கனிகா கபூர் மீது காவல் துறையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
பின் கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி, முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐந்து முறையும் கனிகாவுக்கு கரோனா பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், 6ஆவது முறையாக அவருக்கு கரோனா தொற்று மறைந்து குணமடைந்து உறுதியானது. பின், அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
பிளாஸ்மா சிகிச்சை முறையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சையளிக்கும் விதமாக கனிகா கபூர், தனது பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனிகா கபூருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் பிளாஸ்மா எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.