சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா உள்பட எட்டு பேரை காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ஆம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (NBC) பிடித்து விசாரித்தனர்.
நீதிமன்ற காவலுக்கு அனுமதி
இவர்கள் கைதுசெய்யப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். இதில் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரையும் அக்டோபர் 7ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைத்து என்.சி.பி. விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
நேற்று (அக். 7) பிணை வழங்கக்கோரி ஆர்யன் கான் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுப்புத் தெரிவித்து மேலும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஷாருக் கானை பாலிவுட் பிரபலங்கள் பலர் மும்பை பாந்தராவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தும் சமூக வலைதளங்கள் வழியாகவும் ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ஆர்யன் கானுக்கு ஆதரவாகப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
எச்சரிக்கையுடன் இரு
அதில் ஹிருத்திக் ரோஷன் கூறியிருப்பதாவது, "என் இனிய ஆர்யன் கான், வாழ்க்கை என்னும் பயணம் விநோதமானது; அது நிச்சயமற்றது என்பதால்தான் சிறந்ததாக இருக்கிறது. நம்மிடம் அது பிரச்சினைகளை வீசுவதால்தான் உயர்ந்ததாக இருக்கிறது. ஆனால் கடவுள் கனிவானவர். வலிமையானவர்களுக்குத்தான் கடுமையான சிக்கல்களைத் தருவார்.
இந்தக் குழப்பத்துக்கு நடுவில் நீ உன் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டிய அழுத்தத்தை உணரும்போது நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை உணரலாம். அதை நீ இப்போது உணர்வாய் என்று எனக்குத் தெரியும். கோபம், குழப்பம், இயலாமை போன்றவை உனக்குள் இருக்கும் நாயகனை வெளியே கொண்டுவரத் தேவையான விஷயங்கள்.
ஆனால் அந்த விஷயங்கள் உனக்குள் இருக்கும் இரக்கம், கருணை, அன்பு போன்ற நல்லவற்றையும்கூட எரித்துவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இரு. போதுமான அளவு உனக்குள் கொளுந்துவிட்டு எரியட்டும்.
உன் அனுபவத்தில் கிடைக்கும் விஷயங்களில் எதை வைத்துக்கொள்ள வேண்டும். எதைத் தூக்கி எறிய வேண்டும் என்று உனக்குத் தெரிந்தால் தவறுகள், தோல்விகள், வெற்றி எல்லாம் ஒன்றுதான் என்பதும் உனக்குப் புரியும்.
உனக்கான சிறப்பான காலம் இருக்கிறது
ஆனால் இவற்றோடு உன்னால் நன்றாக முதிர்ச்சியடைய முடியும் என்பதைத் தெரிந்துகொள். உன்னைச் சிறுவனாகவும் வளர்ந்த ஆண் பிள்ளையாகவும் எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நீதான் பொறுப்பு என்று அவற்றை ஏற்றுக்கொள். எல்லா அனுபவங்களையும் ஏற்றுக்கொள். அவைதான் உனக்கான பரிசுகள்.
ஒருகட்டத்தில் எல்லாம் உனக்குப் புரியும்போது இவற்றின் பொருளும் உனக்குப் புரியும். அனைத்தையும் நன்றாகக் கவனி. இந்தத் தருணங்கள்தான் உன்னை உருவாக்கும். உனக்கான சிறப்பான காலம் இருக்கிறது. ஆனால் அந்த வெளிச்சத்துக்கு முன்னால் நீ இருட்டை கடந்தாக வேண்டும். அமைதியாக இரு. அனைத்தையும் ஏற்றுக்கொள். வெளிச்சத்தை நம்பு" எனத் தெரிவித்துள்ளார்.
கங்கனாவின் பதிவு
இந்தப் பதிவிற்கு கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இப்போது பாலிவுட்டில் இருக்கும் அனைத்து மாஃபியாக்களும் ஆர்யன் கானுக்கு ஆதரவு தெரிவித்துவருகிறார்கள்.
நாம் தவறுசெய்கிறோம் அதை ஊக்குவிக்கக் கூடாது. அது அவர்களை மேலும் மேலும் தவறுசெய்ய தூண்டும். அவர்செய்த செயலின் விளைவு தற்போது அவருக்குத் தவறு செய்ததை உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன். அதிலிருந்து அவர் தன்னை திருத்திக்கொண்டு சிறந்தவராக வளர உதவும். ஒருவர் தவறு செய்யும்போது அவர் தவறு செய்யவில்லை என உணரவைப்பது ஒரு குற்றமாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சுஷாந்த் சிங் மறைவுக்குப் பின் கங்கனா பாலிவுட்டில் இருக்கும் பிரபலங்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாக இருப்பதாகவும், போதைப்பொருள் மாஃபியாக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு நீதிமன்ற காவல்!