தமிழில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வேட்டை' படத்தின் ரீமேக்தான் 'பாகி 3'
இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி என்ற கேரக்டரிலும், ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கேரக்டரிலும் சகோதரர்களாக நடித்துள்ளனர். ரித்தேஷ் போலீஸாக தோன்றியுள்ளார். ரோனி - விக்ரம் ஆகிய சகோதரர்களுக்கு இடையேயான பாசப் பிணைப்பை வெளிப்படுத்துவதுபோல் படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது.
சிரியா நாட்டுக்குச் சென்ற விக்ரம் கடத்தல்காரர்கள் பிடியில் சிக்க, ஒற்றை ஆளாக தனது சகோதரரை ரோனி எப்படி மீட்கிறார் என்பதை அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் 'பாகி 3' படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
'பாகி' பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவரவிருக்கும் 'பாகி 3' படத்தில் ஷ்ரதா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். அங்கிதா லோஹான்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் டைகர் ஷெராஃப்பின் தந்தையும், பாலிவுட் மூத்த நடிகருமான ஜாக்கி ஷெராஃப் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.
படத்தின் புரேமோஷன் பணிகள் நடைப்பெற்றுவருகின்றன. இதில் டைகர் ஷெராஃப் கலந்துகொண்டு படத்தில் தான் நடித்த அனுபவம் கூறித்து பத்திரிகையாளர்களிடம் பதிர்ந்துள்ளார். அதில், இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். இப்படம் பெரும்பாலும் செர்பியாவில் படமாக்கப்பட்டது. செர்பியாவில் படப்பிடிப்பு நடத்துவது கடினமான ஒன்று. காரணம் அங்கு வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். இதற்கு முன்பு இது போன்று உழைத்தது கிடையாது என்றார்.
இவரைத்தொடர்ந்து ரித்தேஷ் தேஷ்முக் கூறுகையில், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. காரணம் 15 வருட இடைவெளிக்கு பின் நான் ஒருவருக்கு சகோதராக நடித்துள்ளேன். டைரகர் ஷெராஃப்புடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
அகமத் கான் இயக்கத்தில் உருவாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பாகி 3' மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது.