2017ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் மனுஷி சில்லர். மாடலிங் துறையில் பணியாற்றிவந்த இவர், உலக அழகிப் பட்டதை வென்றதை அடுத்து படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடித்துவருகிறார்.
22 வயதே ஆகும் மனுஷி சில்லர், முதன் முறையாக பாலிவுட்டில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக 'பிரித்விராஜ்' என்ற வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார்.
12ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட மன்னர் பிரித்விராஜ் சவுகானின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் இந்தப்படத்தை பிரபல இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாகிவருகிறது.
இதில், பிரித்விராஜ் மனைவியான சன்யோகிதா கதாபாத்திரத்தில் ராணியாக நடிக்கிறார் மனுஷி சில்லர். பல முன்னணி நடிகைகளுக்கும் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு மனுஷி சில்லருக்கு கிடைத்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடக்கும் நிலையில், இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இதுகுறித்து பகிர்ந்துள்ள மனுஷி சில்லர், எனது முதல் பாடலுக்கான படப்பிடிப்பு ஒரு பெரிய கற்றல் அனுபவத்தை தந்துள்ளது. இதனை எனது வாழ்நாள் முழுவதும் மறவேன். பாடலுக்கான படப்பிடிப்பை அதிகமாக விரும்பினேன். ஒத்திகை பார்ப்பது, படப்பிடிப்பு செய்வது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது எனக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது.
இந்தப் பாடலுக்காக நான் எடுத்த முயற்சி ரசிகர்களால் பாராட்டப்படும் என்று நம்புகிறேன். நான் ஒரு நடிகை ஆவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஒரு இந்திய நடிகையாக இந்த அனுபவத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார்.
'பிரித்விராஜ்' படம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இன்லெண்ட் லெட்டர் எழுத்துகளின் அழகியலை எடுத்துக் கூறும் 'வானம் கொட்டட்டும்'