'பாகுபலி' பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் ராமரின் மனைவி சீதாவின் பார்வையில் கதை சொல்லப்படவுள்ளதால் இந்த படத்துக்கு 'சீதா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அலாவ்கிக் தேசாய் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்திற்கு நடிகை கரீனா கபூரை நடிக்க வைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'சீதா' படத்தில் நடிப்பதற்கு கரீனா கபூர் ரூ. 12 கோடி ஊதியம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் சமூகவலைதள வாசிகள் மற்ற படங்களுக்கு ரூ. 6-8 கோடி வாங்கும் கரீனா, சீதா படத்திற்கு மட்டும் ரூ. 12 கோடி வாங்குவது சரியல்ல என கூறி #BoycottKareenaKhan என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கரீனாவை திட்டி தீர்த்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
மேலும் கடந்த காலங்களில் கரீனா கபூரும் அவரது கணவரும் நடிகருமான சைஃப் அலிகானும் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதை நெட்டிசன்கள் தற்போது நினைவு கூர்ந்து சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர். சீதா கதாபாத்திரத்திற்கு நடிகை கங்கனாவை படக்குழுவினர் அணுகவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்று தெலுங்கில் 2011ஆம் ஆண்டு வெளியான 'ஸ்ரீ ராமராஜியம்' படத்தில் சீதாவாக நயன்தாரா நடித்தார். அப்போது சீதா கதாபாத்திரத்திற்கு நயன்தாரா தகுதியானவர் கிடையாது என பிரச்சனைகள் எழுந்தது. இந்த பிரச்சனைகளை தாண்டி சீதாவாக நயன்தாரா நடித்து பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கினார். அதே போன்று இந்த படத்தில் நடக்குமா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பாலிவுட்டில் ஹாரர், பயோபிக், சீசனை தொடர்ந்து தற்போது புராணம், இதிகாசம், வரலாற்று புனைக் கதைகளை பிரம்மாண்டமாக எடுக்கும் போக்கு பிரபலமாகி வருகிறது. அதன்படி, பிரபாஸ் நடிப்பில் 'ஆதிபுருஷ்', தீபிகா படுகோனே நடிப்பில் 'திரெளபதி' போன்ற படங்கள் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.