நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் இந்தி திரையுலம் போதைப்பொருள் குற்றஞ்சாட்டில் சிக்கியது. இந்த விவகாரம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ரியா சக்கரபோர்த்தி, அவரது சகோதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது ரியா பிணையில் வெளியே உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான மும்பை வீடு, அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் என்சிபி அலுவலர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் அடங்கிய மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. அதே போல் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நதியாட்வாலாவின் மும்பை வீட்டில் என்சிபி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டபோது கஞ்சா, போதை மாத்திரைகளை கைப்பற்றினர். அதன் பிறகு பிரோஸின் மனைவியை அலுவலர்கள் கைது செய்தனர்.
இதையடுத்து, அர்ஜுன் ராம்பால் மும்பையில் நாளை (நவம்பர் 13) நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.