மும்பை: இலக்கியத்துக்கு நோபல் பரிசு வென்ற ஓல்கா டோகார்ஸுக்கை பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் போலந்து நகரான ராக்லாவில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இருவரும் இந்தியா - போலாந்து நாட்டின் இலக்கியங்கள் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். அமிதாப்பின் ராக்லா பயணம் இருநாட்டின் நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதமே ராக்லாவின் ஜனாதிபதி ஜேசெக் சூட்ரிக், அமிதாப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று அமிதாப் அங்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அங்கு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அமிதாப்பின் தந்தையும் இலக்கியவாதியுமான ஹரிவன்ஷ் ராய் பச்சனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் அவருக்கு கெளரவம் செலுத்தும்விதமாக நினைவு சிற்பமும் ராக்லா மையத்தில் நிறுவப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமிதாப்புக்கு ராக்லா பல்கலைக்கழகத்தின் 300ஆவது ஆண்டு விழாவையொட்டி கெளரவ பதக்கமும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அமிதாப் பச்சன், "ராக்லா நகருக்கு வந்து அங்குள்ள மக்களை சந்தித்ததை சிறந்த அனுபவமாகக் கருதுகிறேன். இந்த நகரை பிரபலப்படுத்துவதற்கு என்னை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடம் கூறிக்கொள்கிறேன். நான் விரைவில் எனது குடும்பத்தினருடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்" என்று கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து சூட்ரிக் கூறியதாவது:
நம் இரு நாடுகளையும் இணைக்கும் பல விஷயங்கள் உள்ளன. கலாசாரம், இலக்கியத்தைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் போன்றவர்களால் சினிமாவும்தான். யுனெஸ்கோவின் இலக்கிய நகரமாக ராக்லா சமீபத்தில் மாறியிருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்குள்ளான சந்திப்பு சிறந்த குறியீடாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.