இரு ஆண்களுக்கு இடையேயான காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்'. இந்தப் படத்தில் ஆயஷ்மான் குர்ரானா, ஜித்தேந்திர குமார் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நடிகை பூமி பெட்னேகர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஹிதேஷ் கெவல்யா இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இதனையடுத்து பிரபல மனித உரிமை பரப்புரையாளரும், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆதரவாளருமான பீட்டர் டாட்செல் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஆயுஷ்மான் குர்ரானா நடித்து வெளியாகியிருக்கும் 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' பற்றி பதிவிட்டிருந்தார். இவரது பதிவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரீ-ட்விட் செய்து, 'நன்று' என்று ஒற்றை வார்த்தையில் சுருக்கமாக ரியாக்ட் செய்தார்.
ட்ரம்ப்பின் இந்த ட்விட் பதிவு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் லைக் செய்யப்பட்டிருப்பதுடன், சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோரால் ரீ-ட்விட் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது ட்ரம்ப்பின் நேர்மறை கருத்து வைரலானது.
ட்ரம்ப்பின் இந்த ரீ-ட்வீட் குறித்து ஆயஷ்மான் குர்ரானா கூறுகையில், ”சுப் மங்கல் ஸியதா சவ்தன் படம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து கூறியது மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ட்ரம்ப் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ட்ரம்ப் தொடர்ந்து ஆதரவளிப்பார் என நம்புகிறேன். LGBTQ சமூகத்திற்கு ட்ரம்ப் போன்றவர்கள் ஆதரவளித்தால் அவர்களின் நிலை கண்டிப்பாக மாறும்” எனவும் தெரிவித்தார்.
தன்பாலின ஈர்ப்பு குறித்த கதையாக இருப்பதால் இந்தப் படம் துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியிட தடைசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.